இஸ்லாமாபாத்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கவுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் போக்கு தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
“அமெரிக்கா போரில் சிக்கித் தவிக்கிறது, அங்கிருந்து கௌரவமாக வெளியேறவே வழியைத் தேடுகிறது” என்று ஈரான் பாதுகாப்பு அமைச்சகம் கிண்டலாகத் தெரிவித்துள்ள கருத்து சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கப் பிரதிநிதிகள் பாகிஸ்தானுக்கு வந்து சேர்ந்த போதிலும், அவர்களுடன் நேருக்கு நேர் அமர்ந்து பேச ஈரான் கறாராக மறுத்துவிட்டது.
தனது 10 முக்கிய நிபந்தனைகளை பாகிஸ்தான் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ள ஈரான், நேரடிப் பேச்சுவார்த்தைக்கு இடமே இல்லை என்று ஒற்றைக்காலில் நிற்பது உலக நாடுகளைத் திகைக்க வைத்துள்ளது.
இந்த இக்கட்டான சூழலில், துருக்கி நாட்டின் திடீர் அறிவிப்பு ஒரு முக்கியமான திருப்பமாகப் பார்க்கப்படுகிறது. அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டால், ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள அபாயகரமான கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் தொழில்நுட்ப உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாகத் துருக்கி முன்வந்துள்ளது.
ஈரானின் பிடிவாதத்தால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் அடுத்த 24 மணிநேரத்தில் அமெரிக்கா தனது தாக்குதலைத் தீவிரப்படுத்த வாய்ப்புள்ளதால், இஸ்லாமாபாத் நகரம் முழுவதும் ஊரடங்கு போன்ற கடும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஈரானின் இந்த அதிரடி நிலைப்பாட்டால் போர் பதற்றம் குறையுமா அல்லது நிலைமை கைமீறிப் போகுமா என்பது இன்னும் சில மணிநேரங்களில் தெரிந்துவிடும்.
