இந்தியாவின் தெருக்களில் ஆதரவின்றி சுற்றித் திரிந்த ஒரு சாதாரண தெருநாய், தற்பொழுது பௌத்த துறவிகளுடன் இணைந்து உலக அமைதிக்கான பயணத்தின் ஒரு பகுதியாக அமெரிக்கா முழுவதும் சுமார் 2,300 மைல்கள் வரை நடந்து சாதனை படைத்த பின், மீண்டும் தனது தாய்நாடான இந்தியாவிற்குத் திரும்பியுள்ள நெகிழவைக்கும் சினிமா பாணி கதை ஒட்டுமொத்த சமூக வலைத்தளவாசிகளை வியப்பில் ஆழ்த்தி நெஞ்சங்களை உருக வைத்துள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டு இந்தியா மற்றும் நேபாள எல்லைப் பகுதிகளில் உள்ள தெருக்களில் பசியோடு அலைந்து திரிந்த இந்த நாய்க்குட்டி, அங்கு புனித யாத்திரை வந்த பௌத்த துறவிகளின் அமைதியான அன்பால் ஈர்க்கப்பட்டு அவர்களைத் தொடர்ந்து நிழல் போலப் பின்தொடர ஆரம்பித்துள்ளது.
View this post on Instagram
பசி, நோய், கடுமையான சோர்வு என எவ்விதத் தடைகள் வந்தும் துறவிகளை விட்டுப் பிரியாத இந்த நாயின் அசாத்திய விசுவாசத்தைப் பார்த்த பௌத்த துறவிகள், அதற்குப் பாலி மொழியில் “பேரொளி” என்று பொருள்படும் ‘அலோகா’ (Aloka) என்று அன்போடு பெயரிட்டுத் தங்களோடு சேர்த்துக் கொண்டனர்.
குறிப்பாக, அலோகாவிடம் இருந்த அதீத பக்தியைக் கண்டு உருகிய வணக்கத்திற்குரிய பிக்கு பண்ஞாகரா (Venerable Bhikkhu Paññākāra) என்ற துறவி, அந்த நாயை மீண்டும் தெருவில் தவிக்கவிட மனமில்லாமல் சட்டப்பூர்வமாகத் தங்களோடு அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்று டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹுவாங் தாவோ விபாசனா பவானா மையத்தில் தங்க வைத்தார்.
அங்கு சும்மா இருக்காத அலோகா, கடந்த 2025-ஆம் ஆண்டில் பௌத்த துறவிகளுடன் கைகோர்த்து அமெரிக்கா முழுக்க 2,300 மைல்களுக்கும் மேல் உலக அமைதிக்காக நடைப்பயணம் மேற்கொண்டதுடன், இலங்கை மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளுக்கும் பயணம் செய்து ஒரு சர்வதேச அமைதித் தூதராகவே மாறியுள்ளது.
இந்த நிலையில், தங்களது அடுத்தகட்ட ஆன்மீகப் பயணத்திற்காகத் துறவிகளுடன் ஜூன் 8, 2026 அன்று அலோகா மீண்டும் இந்திய மண்ணில் கால் பதித்துள்ள நெகிழவைக்கும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி, நெட்டிசன்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் லைக்குகளை அள்ளி அசுர வேகத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
