அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் தொடர் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, தனது கட்டுப்பாட்டில் உள்ள உலகின் மிக முக்கிய கடல் வழிப்பாதையான ஹார்முஸ் நீரிணையை ஈரான் அண்மையில் மூடியது. இதன் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்களின் போக்குவரத்து முடங்கி, உலகளவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு போன்ற கடுமையான பொருளாதாரப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்தச் சூழலில், அமெரிக்காவுடனான தற்காலிகப் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக, ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, ஹார்முஸ் நீரிணையானது ஈரான் மற்றும் ஓமான் நாடுகளின் முழுமையான கூட்டு இறையாண்மைக்கு உட்பட்ட பகுதி என்பதால், இனிவரும் காலங்களில் இந்த கடல் வழிப்பாதையைப் பயன்படுத்தும் அனைத்து சர்வதேசக் கப்பல்களுக்கும் “சேவைக் கட்டணம்” வசூலிப்பது கட்டாயமாக்கப்படும் என்று அவர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கடல்சார் சட்டங்களின்படி இந்த வழித்தடத்தில் ‘போக்குவரத்துச் சுங்கக் கட்டணம்’ விதிக்க முடியாது என்பதால், மாற்று வழிமுறையாக இந்தக் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. அதன்படி, கப்பல்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு, வழிகாட்டுதல், மீட்புப் பணிகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றிற்கான “சேவைக் கட்டணம்”  என்ற பெயரில் இது வசூலிக்கப்படும் என்றும், இதுகுறித்த புதிய விதிமுறைகள் அடங்கிய கூட்டு அறிக்கை விரைவில் ஓமான் நாட்டுடன் இணைந்து வெளியிடப்படும் என்றும் ஈரான் அரசு குறிப்பிட்டுள்ளது. உலகின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் போக்குவரத்தில் சுமார் 20 சதவீதம் இந்த ஹார்முஸ் நீரிணை வழியாகவே நடைபெற்று வரும் நிலையில், ஈரானின் இந்த அதிரடி முடிவு சர்வதேச எரிசக்தி சந்தையிலும், உலக வர்த்தக வட்டாரத்திலும் பெரும் பரபரப்பையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.