மெக்ஸிகோவின் கன்குனில் இருந்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நோக்கிப் புறப்படத் தயாராக இருந்த யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம், திடீரென தேனீக்கள் படையெடுத்ததால் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. விமானத்தின் ஒரு சிறகுப் பகுதியில் ஆயிரக்கணக்கான தேனீக்கள் கூட்டம் கூட்டமாக அமர்ந்திருப்பதை ஊழியர்கள் கவனித்ததால் பாதுகாப்பு கருதி விமானம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து, தரையிறங்கு பணியாளர்கள் உடனடியாக களமிறங்கி, அந்த தேனீக்களை அகற்றும் பணிகளை மேற்கொண்டனர். இக்காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

 

இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்த யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம், தேனீக்கள் விமானத்தின் உட்பகுதிக்குள் நுழையவில்லை என்றும், தொழில்நுட்ப ஊழியர்களின் துரித நடவடிக்கையால் பிரச்சனை உடனடியாகச் சரிசெய்யப்பட்டதாகவும் தெரிவித்தது. தேனீக்கள் அகற்றப்பட்ட பிறகு புறப்பட்ட அந்த விமானம் (Flight 1275), இடையூறு காரணமாக ஏற்பட்ட தாமதத்தையும் கடந்து, லாஸ் ஏஞ்சல்ஸை திட்டமிட்ட நேரத்தை விட 12 நிமிடங்கள் முன்னதாகவே வெற்றிகரமாகச் சென்றடைந்தது.