ஈரானின் முக்கிய தலைவர்களான அயதுல்லா அலி கமெனி மற்றும் அலி லாரிஜானி ஆகியோரைப் படுகொலை செய்ததன் மூலம் ஈரானை வீழ்த்திவிடலாம் என இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா போடும் கணக்கு, அவர்களுக்கே வினையாக முடிய வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.
ஈரானைப் பொறுத்தவரை அது தனிநபரைச் சார்ந்த நாடு அல்ல; மாறாக வலுவான மத மற்றும் ராணுவக் கட்டமைப்பைக் கொண்ட நாடு. ஒரு தலைவரை இழந்தால், அந்த இடத்திற்கு உடனடியாக வருவதற்கு நான்கு அடுக்கு வாரிசுத் திட்டத்தை ஈரான் ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ளது.
இப்போது கொல்லப்பட்ட தலைவர்களைப் பற்றிய உளவுத் தகவல்கள் அமெரிக்காவிடம் இருந்தன. ஆனால், புதிதாகப் பொறுப்பேற்கப் போகும் ‘அறியப்படாத’ இளம் தலைவர்கள் இன்னும் ஆக்ரோஷமானவர்களாகவும், சமரசத்திற்கு இடமில்லாதவர்களாகவும் இருப்பார்கள் என்பதுதான் இஸ்ரேலுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால்.
மேலும், இந்த வெளிநாட்டுத் தாக்குதல்களால் ஈரானில் நிலவிய உள்நாட்டுப் போராட்டங்கள் மறைந்து, மக்கள் தங்கள் தலைவர்களை ‘தியாகிகளாகக்’ கொண்டாடி அரசுக்கு ஆதரவாக ஒன்று திரண்டுள்ளனர்.
இந்த ‘தலை துண்டிப்பு’ உத்தியானது ஈரானை நிலைகுலையச் செய்வதற்குப் பதிலாக, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கு நீண்ட காலப் போரையும், நிழல் உலகப் படைகளின் பேரழிவையும் பரிசாகத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
