அமெரிக்காவில் உள்ள ஒரு கடையில், இரவு நேரத்தில் கொள்ளை முயற்சியின் போது, 49 வயதுடைய குஜராத்தைச் சேர்ந்த கீரன் படேல் எனும் பெண், துப்பாக்கிச்சூட்டில் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார். DD’s Food Mart என்ற கடையை நடத்தி வந்த கிரண் படேல், தனியாக கடையில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, முகமூடியுடன் நுழைந்த ஒரு கொள்ளையன் திடீரென தாக்குதல் நடத்தினார்.

கிரண் படேல் தன்னைக் காப்பாற்ற கடையில் உள்ள பொருள்களை கொள்ளையனை நோக்கி எறிந்தார். ஆனால் துப்பாக்கியுடன் வந்த நபர் பணம் கேட்டு மிரட்டியதோடு, எதிர்த்து நின்ற கிரணை துப்பாக்கியால் சுட்டு தாக்கினார். பின்னர் கிரண் கடையை விட்டு வெளியே ஓட முயன்றபோது, கொள்ளையன் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு மேற்கொள்ள, 20 அடி தொலைவில் உள்ள பார் பகுதியில் விழுந்து உயிரிழந்தார். போலீசார் வந்து பார்வையிட்டபோது, அந்த இடத்தில் கண்ணாடி துண்டுகள், வெறும் துப்பாக்கி குண்டுகள் உள்ளிட்ட பல்வேறு சாட்சிகள் கிடைத்துள்ளன.

காவல்துறையினர் கிரணின் மரணத்தை உறுதி செய்து தப்பியோடிய குற்றவாளியை கைது செய்ய பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர். பல ஆண்டுகளாக கடையை நடத்தி வந்த கிரண் படேல், உள்ளூரில் மிகவும் மதிப்புடையவராகவும், கடமை உணர்வுடன் பணியாற்றியவராகவும் மக்கள் புகழ்ந்து வருகிறார்கள். இந்த சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.