மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வர ஈரானுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்த கருத்தை ஈரான் ராணுவத் தலைமை முற்றிலுமாக நிராகரித்துள்ளது. “உங்கள் தோல்வியை ஒப்பந்தம் என்று அழைத்து உலகை ஏமாற்றாதீர்கள்” என்று ஈரான் கடும் தொனியில் பதிலடி கொடுத்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ பதிவில், “ஈரானுடன் கடந்த இரண்டு நாட்களாக மிகவும் பயனுள்ள பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. போரை முடிக்க அவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்” என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், இதனை ‘போலிச் செய்தி’ என வர்ணித்துள்ள ஈரானிய ராணுவ செய்தித் தொடர்பாளர், “எங்கள் ஆயுதப் படைகளின் வலிமையை நீங்கள் உணரும் வரை பிராந்தியத்தில் அமைதி திரும்பாது. நீங்கள் உங்களோடு நீங்களே பேச்சுவார்த்தை நடத்திக் கொள்கிறீர்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒருபுறம் பேச்சுவார்த்தை நடப்பதாகக் கூறும் டிரம்ப் நிர்வாகம், மறுபுறம் ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக 3,000 உயரடுக்கு வீரர்களைமத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது. இது ஈரானுக்கு அழுத்தம் கொடுக்கும் தந்திரமா அல்லது போரை விரிவுபடுத்தும் முயற்சியா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட போதிலும், ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) சற்றும் பின்வாங்காமல் பதிலடி கொடுத்து வருகிறது. குறிப்பாக, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகளை ஈரான் இலக்கு வைத்தது டிரம்ப் நிர்வாகத்திற்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, அப்பகுதி நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதால், போரை உடனே நிறுத்துமாறு டிரம்பிற்கு அழுத்தம் அதிகரித்து வருகிறது.

அமெரிக்காவில் டிரம்பின் செல்வாக்கு சரிந்து வருவதாகக் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. “முடிவில்லாப் போர்களை நிறுத்துவேன்” என்ற வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்த டிரம்ப், இப்போது போரை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஆனால், ஈரான் விதிக்கும் நிபந்தனைகள் அமெரிக்காவிற்குச் சவாலாக உள்ளன.போர் காரணமாக ஈரானில் இதுவரை 1,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கடந்த 25 நாட்களாக அந்நாட்டில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளதால் சிறு வணிகங்கள் பாதிக்கப்பட்டு, பணவீக்கம் அதிகரித்துள்ளது. இருப்பினும், தனது நாட்டின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கிடைக்கும் வரை அமெரிக்காவின் 15 அம்ச நிபந்தனைகளை ஏற்க ஈரான் தயாராக இல்லை என்றே தெரிகிறது.