வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ, அமெரிக்காவிற்குப் போதைப் பொருட்களைக் கடத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டு, கடந்த வாரம் அமெரிக்கப் பாதுகாப்புப் படையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இதனை வரவேற்றார். ஒரு சர்வாதிகாரி இப்படித்தான் நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், இதேபோன்ற நடவடிக்கையை ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராகவும் அமெரிக்கா எடுக்க வேண்டும் என்ற தனது எதிர்பார்ப்பை மறைமுகமாக வெளிப்படுத்தினார்.
இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த ட்ரம்ப், புதினைக் கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று திட்டவட்டமாகக் கூறினார்.
“புதினுக்கும் எங்களுக்கும் எப்போதுமே ஒரு சிறந்த உறவு இருக்கிறது; எனவே அத்தகைய நடவடிக்கை தேவையில்லை” என்று அவர் மிகவும் இயல்பாகத் தெரிவித்தார். மதுரோ விவகாரத்தில் காட்டிய அதிரடியைப் புதின் விஷயத்தில் காட்டப் போவதில்லை என்பதை ட்ரம்ப் இதன் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.
முன்னதாகப் பேசிய ட்ரம்ப், ரஷ்யா – உக்ரைன் போர் முடிவுக்கு வராதது தமக்கு மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாகத் தெரிவித்தார். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 31,000 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ரஷ்யப் பொருளாதாரம் மோசமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தன்னால் இந்தப் போரை எளிதாக முடிக்க முடியும் என்று நம்புவதாகவும், இனியும் வீரர்கள் உயிரிழப்பதைத் தடுத்து விரைவில் அமைதியை நிலைநாட்டப் போவதாகவும் ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.
