ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே 15 நாள் தற்காலிக போர் நிறுத்தம் அமலுக்கு வந்த சில மணி நேரங்களிலேயே, ஈரானின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது மத்திய கிழக்கு நாடுகளில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. ஈரானின் ஹோர்முஸ்கான் மாகாணத்தில், பாரசீக வளைகுடா பகுதியில் அமைந்துள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ‘லாவன்’ தீவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கடந்த புதன்கிழமை காலை இந்தத் தீவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் சக்திவாய்ந்த வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்ததாகவும் ஈரானின் ‘மெஹ்ர்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த வெடிப்புச் சம்பவத்திற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இதேபோல், ‘சிரி’ (Siri Island) தீவிலும் சில வெடிப்புகள் நிகழ்ந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரான் – இஸ்ரேல் இடையே கடந்த 40 நாட்களாக நீடித்து வந்த மோதலைத் தொடர்ந்து, 15 நாட்களுக்குப் போர் நிறுத்தம் செய்ய இரு தரப்பும் ஒப்புக் கொண்டன. இந்த ஒப்பந்தம் புதன்கிழமை காலை முதல் அமலுக்கு வந்தது. ஆனால், ஒப்பந்தம் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே ஈரானின் எண்ணெய் முனையங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மற்றும் குவைத் நாடுகளிலும் தாக்குதல் குறித்த செய்திகள் வெளியாகியுள்ளன. ஈரானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளைத் தங்களது வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்துத் தாக்கியதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. லாவன் தீவில் நிகழ்ந்த இந்த வெடிப்புகளில் உயிரிழப்புகள் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து ஈரான் தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டும் தாக்குதல்கள் தொடர்வதால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி நிலவுமா என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது.

சுமார் 78 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட லாவன் தீவு, ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் சுத்திகரிப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இங்கிருந்துதான் ஈரானின் பெரும் பகுதி எண்ணெய் சர்வதேசச் சந்தைக்குக் கொண்டு செல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.