உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் சாபூர் பகுதியில் உள்ள திறந்தவெளி சாக்கடை கால்வாயில் தவறி விழுந்து, பீகாரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி தேதர் தாஸ் (40) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். கால்வாயில் விழுந்த அவரைப் பொதுமக்கள் மற்றும் போலீஸார் சுமார் அரை மணி நேரம் போராடி மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்தத் துயரச் சம்பவத்தை விட, உயிரிழந்த தேதர் தாஸின் மகள் அஞ்சு போனில் போலீஸாரிடம் கண்ணீருடன் விடுத்த கோரிக்கை அங்கிருந்த அதிகாரிகளையும் நெஞ்சுறுகச் செய்துள்ளது. உயிரிழந்தவரின் விபரங்களைச் சேகரித்த போலீஸார், பீகாரில் உள்ள அவரது மகள் அஞ்சுவுக்குத் தகவல் கொடுத்த போதுதான் அந்த ஏழைக் குடும்பத்தின் வறுமை நிலை வெளிச்சத்திற்கு வந்தது.
தன் தந்தையின் மரணச் செய்தியைக் கேட்டு உடைந்தபோன மகள் அஞ்சு, “ஐயா, எனக்கு திருமணமாகி 5 குழந்தைகள் உள்ளனர்; கணவர் கூலி வேலை செய்து எங்களைக் காப்பாற்றி வருகிறார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு என் தாயும் ரத்தப் புற்றுநோயால் இறந்துவிட்டார். இப்போது என் தந்தையின் உடலை வாங்க கோரக்பூர் வருவதற்கு கூட எங்களிடம் ரயில் வாடகைக்குக் காசில்லை. என்னால் வர முடியாது, தயவுசெய்து நீங்களே என் தந்தையின் இறுதிச்சடங்குகளைச் செய்துவிடுங்கள்” என கதறியுள்ளார்.
ஒரு மகளின் இந்த ஏழ்மை நிலையைக் கண்டு உறைந்துபோன கோரக்பூர் போலீஸார், மனிதநேயத்துடன் அந்த உடலைப் பொறுப்பேற்றுக் கொண்டனர். போலீஸ் நிர்வாகமே முன்னின்று தேதர் தாஸின் உடலுக்கு கோரக்பூர் ராஜ்காட் மயானத்தில் முழு மரியாதையுடன் இறுதிச்சடங்குகளைச் செய்து முடித்ததுடன், அந்த மகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்துள்ளனர்.
