தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் தற்போதைய நிலை குறித்து அவரது மகள் கயல்விழி பகிர்ந்துள்ள உருக்கமான கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தேர்தல் காலங்களில் வார்டு வாரியாக நிர்வாகிகளைச் சுறுசுறுப்பாகச் செயல்பட வைக்கும் தனது தந்தை, இந்த முறை வீட்டிற்குள்ளேயே முடங்கியிருப்பது ஒரு சிங்கத்தைக் குகைக்குள் அடைத்து வைத்திருப்பதைப் போன்ற உணர்வைத் தருவதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
தனது தந்தை எந்த வருத்தத்தையும் வெளிக்காட்டிக் கொள்ளாவிட்டாலும், அவர் சரியாக உணவு உட்கொள்ளாதது தங்களுக்கு மிகுந்த மனவேதனையை அளிப்பதாகக் கயல்விழி குறிப்பிட்டுள்ளார். தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தாலும், தேர்தல் நேரத்தில் அவரது செயல்பாடுகள் இல்லாதது குறித்து அவரது குடும்பத்தினர் பகிர்ந்துள்ள இந்த எமோஷனல் பதிவு, தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பகிரப்பட்டு பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.
