தமிழக அரசு இன்று வெளியிட்ட மாநிலக் கல்விக் கொள்கையில், 11ஆம் வகுப்பிற்கு (பிளஸ்-1) இனி பொதுத்தேர்வு நடத்தப்படமாட்டாது என்று முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன் மூலம், 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கே மட்டும் பொதுத்தேர்வு நடைபெறும். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்து இதனை உறுதிப்படுத்தினார். இந்த முடிவு, தற்போது 11ஆம் வகுப்பில் படித்து வரும் மாணவர்களுக்கும் உடனடியாக அமலாகும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், 8ஆம் வகுப்பு வரை தடையற்ற தேர்ச்சி (ஆல் பாஸ்) கொள்கை தொடரும் என்றும், இருமொழிக் கொள்கை நிலைநிறுத்தப்படும் என்றும் மாநிலக் கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ளது.

அமைச்சர் விளக்குகையில், 2018ஆம் ஆண்டு அப்போதைய அமைச்சர் செங்கோட்டை யான் அறிமுகப்படுத்திய +1 பொதுத்தேர்வு, மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் பிற பாடங்களில் வலுவான அடித்தளத்தை வழங்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டதாகவும், குறிப்பாக பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி போன்ற அடிப்படை அறிவியல் பாடங்களை கற்றுக் கொள்ளும் மாணவர்களுக்கு இது உதவியாக இருந்ததாகவும் கூறினார்.

ஆனால், 10, 11, 12ஆம் வகுப்புகளில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பொதுத்தேர்வு எழுத வேண்டிய நிலை, மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தியதால், பல்வேறு தரப்பிலிருந்தும் புகார்கள் வந்தன. அந்த புகார்களை பரிசீலித்து, மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் நோக்கில் +1 பொதுத்தேர்வை ரத்து செய்ய தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மாநிலக் கல்விக் கொள்கையில், இன்றைய சூழ்நிலைக்குத் தேவையான அறிவியல் பாடங்கள் மற்றும் உடற்கல்வி போன்ற பாடங்கள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன. மேலும், 83 பக்கங்கள் கொண்ட இந்த விரிவான கல்விக் கொள்கை புத்தகம், பள்ளிக் கல்வித் துறையின் இணையதளத்தில் e-book வடிவில் பதிவிறக்கம் செய்யும் வகையில் பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் இந்த மாற்றம், மாணவர்கள் மீது இருந்த பரீட்சை அழுத்தத்தை குறைத்து, கல்வி தரத்தை மேம்படுத்தும் என அரசு நம்புகிறது.