2026-ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றதைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தென்னாப்பிரிக்க அணியை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். “இந்தத் தொடரின் முட்டாள்தனமான அணி” என்று தென்னாப்பிரிக்காவைச் சாடியுள்ள அவர், சூப்பர்-8 சுற்றில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராகத் தென்னாப்பிரிக்கா பெற்ற வெற்றியே இந்திய அணி கோப்பையை வெல்ல ஒரு முக்கிய காரணமாக அமைந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா தோற்றிருந்தால், இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் தொடரிலிருந்து வெளியேறியிருக்கக் கூடும் என்றும், ஒரு பலமான அணியை ஆரம்பத்திலேயே வெளியேற்றும் வாய்ப்பைத் தென்னாப்பிரிக்கா தவறவிட்டுவிட்டதாகவும் அவர் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.
இதனால் மைக்கேல் வாகனின் இந்தக் கருத்து கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சூப்பர்-8 சுற்றில் தென்னாப்பிரிக்காவிடம் தோற்ற இந்தியா, பின்னர் ஜிம்பாப்வே மற்றும் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்நிலையில் “இந்தியா போன்ற ஒரு வலுவான அணியை வீழ்த்த நினைத்தால், அவர்களைத் தொடக்கத்திலேயே வெளியேற்ற வேண்டும், இல்லையெனில் அவர்கள் விஸ்வரூபம் எடுத்துவிடுவார்கள்” என வாகன் சுட்டிக்காட்டியுள்ளார். நேர்மையாக விளையாடி வெற்றி பெற்ற ஒரு அணியை இவ்வாறு விமர்சிப்பது விளையாட்டு உணர்வுக்கு எதிரானது எனப் பல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாகனுக்குப் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
