இங்கிலாந்தின் ‘தி ஹன்ட்ரட்’ கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறனுக்குச் சொந்தமான ‘சன்ரைசர்ஸ் லீட்ஸ்’ அணி, பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமதுவை 2.55 லட்சம் டாலருக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. ஐபிஎல் தொடரில் பாகிஸ்தான் வீரர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வெளிநாட்டு லீக் தொடரில் இந்திய உரிமையாளரைக் கொண்ட ஒரு அணி முதல்முறையாக பாகிஸ்தான் வீரரை ஒப்பந்தம் செய்துள்ளது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியாவின் தேசிய உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவில்லை என சமூக வலைதளங்களில் காவ்யா மாறன் மற்றும் சன்ரைசர்ஸ் நிர்வாகத்திற்கு எதிராகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்த சர்ச்சை குறித்து விளக்கம் அளித்துள்ள சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி, அணியின் முதல் தேர்வாக இருந்த அடில் ரஷித்தை ஏலத்தில் எடுக்க முடியாததாலேயே, அவருக்கு மாற்றாக அப்ரார் அகமதுவை தேர்வு செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் தேவை மற்றும் விநியோக அடிப்படையில் மட்டுமே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், அப்ரார் அணியில் இணைந்தது திருப்தி அளிப்பதாகவும் அவர் கூறினார். இருப்பினும், இந்திய ரசிகர்களிடையே கொந்தளிப்பு நீடிப்பதால், சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியின் சமூக வலைதள கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை காவ்யா மாறன் தரப்பிலிருந்து இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியாகவில்லை.