தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமக, அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதாக அறிவித்துள்ளது. ஆனால், இந்த முடிவில் டாக்டர் ராமதாஸ் தரப்பினர் கடும் அதிருப்தியில் இருப்பதாகத் தெரிகிறது. இது குறித்து வெளிப்படையாகப் பேசிய பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள், “எடப்பாடி பழனிசாமிக்கு என்ன அழுத்தம் இருக்கிறது என்று தெரியவில்லை, ஆனால் அன்புமணியுடன் கூட்டணி வைப்பவர்கள் நிச்சயம் ஏமாந்துதான் போவார்கள்” என்று மிகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
இந்தக் கூட்டணி அறிவிப்பால் பாமகவிற்குள் தந்தை மற்றும் மகன் ஆதரவாளர்களிடையே வெளிப்படையான மோதல் வெடித்துள்ளது. அன்புமணி தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்துள்ளாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது குறித்து மேலும் விளக்கமளித்த எம்.எல்.ஏ அருள், உண்மையான சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் சில நாட்களில் டாக்டர் ராமதாஸ் வெளியிடுவார் என்று தெரிவித்துள்ளார். இதனால் அதிமுக – பாமக கூட்டணி நீடிக்குமா அல்லது உடையுமா என்ற குழப்பம் அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.
