தமிழகத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்குள் சமீப காலமாக ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கருத்தால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ மற்றும் எம்பிக்கள் என பலரும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது காங்கிரஸ் தொண்டர்களின் பலநாள் கனவு எனவும் அது நனவாகும் காலம் வந்துவிட்டது எனவும் கூறி வருகிறார்கள். அதே நேரத்தில் திமுக தலைவர்கள் இதனை மறுக்கின்றனர்.
காங்கிரஸ் கட்சியினர் அழுத்தமாக கூட்டணி இல்லாமல் ஆளும் கட்சியால் ஆட்சிக்கு வர முடியாது எனவும் எனவே ஆட்சி அதிகாரத்தில் இனி பங்கு என்பது முக்கியம் எனவும் வலியுறுத்தி வரும் நிலையில் இதனால் திமுக மற்றும் காங்கிரஸ் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தற்போது இது தொடர்பாக ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது இனி கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் பொதுவெளியில் கருத்து தெரிவிக்க கூடாது என அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியா கூட்டணியை பலவீனப்படுத்தும் முயற்சி வெற்றி பெற்றால் அது அதிமுக மற்றும் பாஜகவுக்கு சாதகமாக அமைந்துவிடும் என்பதால் இனி இதைப் பற்றி யாரும் பேசக்கூடாது என அவர் அறிவுறுத்தியதாக தகவல் வெளிவந்துள்ளது.
