சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தரப்பைத் தனது கூட்டணியில் இணைக்க அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்துள்ளதாக வெளியாகி வரும் தகவல்கள் தமிழக அரசியலில் பெரும் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த சில மாதங்களாகவே பா.ம.க. நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கடுமையான அதிகாரப் போட்டி நிலவி வந்தது. இதன் உச்சகட்டமாக, அன்புமணியைக் கட்சியிலிருந்து ராமதாஸ் நீக்கினார். இருப்பினும், “நானே பா.ம.க.வின் உண்மையான தலைவர்” என அறிவித்த அன்புமணி, தனது ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தார்.

தந்தை – மகன் பிரிவால் பா.ம.க. இரு அணிகளாகச் சிதறிய நிலையில், ராமதாஸ் தரப்பு எந்தப் பக்கம் செல்லும் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், ராமதாஸின் தீவிர ஆதரவாளரான மேட்டூர் எம்.எல்.ஏ. அருள், நேற்று எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு ராமதாஸ் தரப்பும் அ.தி.மு.க. கூட்டணிக்கு வருவதற்கான சமிக்ஞையாகவே கருதப்பட்டது.

ஆனால், ராமதாஸ் தரப்புடன் கூட்டணி குறித்துப் பேச எடப்பாடி பழனிசாமி தரப்பு மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. இதற்கான முக்கிய காரணங்களாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுவது: ஏற்கெனவே கூட்டணியில் உள்ள அன்புமணி தரப்பைத் தாண்டி, ராமதாஸ் தரப்பை உள்ளே இழுத்தால் அது கூட்டணியில் பெரும் குழப்பத்தை உண்டாக்கும்.

 ரண்டு தரப்பும் பா.ம.க.வின் பெயரில் தொகுதிகளைக் கேட்டால், அதனைப் பிரித்துக் கொடுப்பதில் தேவையற்ற தலைவலி ஏற்படும் என எடப்பாடி பழனிசாமி கருதுகிறார். தந்தை – மகன் இடையிலான ஈகோ யுத்தத்தில் கூட்டணி பாதிக்கப்படக்கூடாது என்பதில் அ.தி.மு.க. தலைமை உறுதியாக உள்ளது. மேலும் ஏற்கனவே திமுக கூட்டணியில் பாமக ராமதாஸ் இணைவதற்கு விசிக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தற்போது அதிமுகவும் கூட்டணிக் கதவை மூடியதால் அடுத்ததாக ராமதாஸ் எடுக்க போகும் முடிவு என்ன என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.