ஆந்திர மாநிலத்தில் போதிய மருத்துவ வசதி மற்றும் அமரர் ஊர்தி இல்லாத காரணத்தால், உயிரிழந்த தந்தையின் உடலை அவரது மகன்கள் இருசக்கர வாகனத்தில் 11 கிலோமீட்டர் தூரம் சுமந்து சென்ற அவலம் அரங்கேறியுள்ளது.
ஆந்திர மாநிலம், பாபட்லா மாவட்டம் சித்தைய்யா பாலம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகேஷ். ஏரிக்கரையில் உள்ள ஒரு சிறிய குடிசையில் தனது மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுடன் வசித்து வந்தார். நேற்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக நாகேஷ் மயங்கி விழுந்தார். பதற்றமடைந்த அவரது மகன்கள், உடனடியாக அவரை பாபட்லா அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
தந்தையின் மறைவு ஒருபுறம் வாட்ட, அவரது உடலைச் சொந்த ஊருக்குக் கொண்டு செல்ல ஆஸ்பத்திரியில் இலவச அமரர் ஊர்தி வசதி இல்லை எனக் கூறப்படுகிறது. தனியார் ஆட்டோக்களை அணுகியபோது, அவர்கள் ரூ. 3,000 வாடகை கேட்டுள்ளனர். ஏழ்மை நிலையில் இருந்த மகன்களிடம் அவ்வளவு பணம் இல்லாததால், செய்வதறியாது திகைத்தனர்.
இறுதியில், வேறு வழியின்றி தனது சகோதரரின் உதவியுடன், தந்தையின் சடலத்தை இருசக்கர வாகனத்தின் நடுவில் வைத்து அமரச் செய்தவாறு, சுமார் 11 கிலோமீட்டர் தூரம் கிராமத்திற்கு எடுத்துச் சென்றனர். சாலையோரம் சென்றவர்கள் இந்தத் துயரக் காட்சியைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாபட்லா மாவட்ட ஆட்சியர் வினோத் குமார் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். “புதிய அமரர் ஊர்திகள் வாங்குவதற்கான திட்ட அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த இளைஞர்கள் தங்களிடம் பணம் இல்லை என்று மருத்துவமனை நிர்வாகத்திடம் முறையாகத் தெரிவித்திருந்தால், ஊழியர்கள் நிச்சயம் உதவி செய்திருப்பார்கள்” என அவர் தெரிவித்தார்.
ஆட்சியரின் விளக்கத்தை மறுத்துள்ள நாகேஷின் மகன்கள், “நாங்கள் உதவியற்ற நிலையில் நின்றபோது மருத்துவமனை ஊழியர்கள் குறைந்தபட்ச உதவியைக் கூட செய்ய முன்வரவில்லை” என வேதனையுடன் தெரிவித்தனர்.
நவீன காலத்தில் ஒரு உடலைச் கண்ணியமாக எடுத்துச் செல்லக் கூட வசதி இல்லாத இந்த அவல நிலை, அரசு மருத்துவமனைகளின் நிர்வாகச் சீர்கேட்டைப் படம் பிடித்துக் காட்டுவதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்
