மத்தியப்பிரதேச மாநிலம், ரிவா மாவட்டம், சிமாரியா பகுதியில் உள்ள பள்ளியில் +1 படித்து வந்த ஒரு மாணவி, கடந்த நவம்பர் 16-ஆம் தேதி இரவு தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த மாணவியை வகுப்பு ஆசிரியர் பாடம் சரியாகப் படிக்கவில்லை என்று கூறி கடுமையாகத் தாக்கியதாகவும், தண்டனை என்ற பெயரில் தொடர்ந்து மனரீதியாகத் துன்புறுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆசிரியரின் இந்தத் தொடர் துன்புறுத்தல்களால் மன உளைச்சலின் உச்சத்திற்குச் சென்ற மாணவி இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

மாணவி தற்கொலை செய்துகொண்ட தகவல் அறிந்த போலீசார், உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலை நடந்த அறையில் மாணவி எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர்.

அந்தக் கடிதத்தில், தனது தற்கொலைக்குக் காரணம் ஆசிரியரின் தொடர் துன்புறுத்தலே என்று மாணவி தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட கடிதத்தின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்து, போலீசார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.