பஞ்சாபில் மின்கம்பிக்ளுக்கிடையே சிக்கித் தவித்த பறவை ஒன்றைத் தனது உயிரைப் பொருட்படுத்தாமல் கிரே உதவியுடன் இளைஞர் ஒருவர் மீட்ட வீடியோ சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒரு குருத்வாராவின் அருகே அமைந்துள்ள உயரமான மின் கம்பத்தில், மின்சாரக் கம்பியில் சிக்கிப் பறவை ஒன்று உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் செய்வதறியாது திகைத்தனர். அந்தப் பறவை மிகவும் உயரத்தில் இருந்ததால், சாதாரண ஏணிகள் மூலம் அதனை மீட்பது சாத்தியமற்றதாக இருந்தது.
அந்த நேரத்தில் அங்கிருந்த கிரேன் இயந்திரத்தை இயக்கும் நபர், ஒரு துணிச்சலான முடிவை எடுத்தார். கிரேனின் நீண்ட இரும்பு கரத்தின் நுனியில் பாதுகாப்புக் கவசங்கள் ஏதுமின்றித் தொங்கியபடி, அவர் மெல்ல மெல்ல மின்கம்பியை நோக்கி உயர்த்தப்பட்டார்.
View this post on Instagram
அதிவேகமாக வீசிய காற்று மற்றும் மிக உயரமான இடத்தில் இருந்து கீழே விழுந்துவிடும் அபாயம் இருந்தபோதிலும், சற்றும் பதற்றமடையாமல் அந்தப் பறவைக்கு அருகில் சென்றார். பல நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு, சிக்கியிருந்த பறவையைத் தனது கைகளால் லாவகமாக விடுவித்து அதனைப் பறக்கச் செய்தார்.
இந்த மீட்பு நடவடிக்கையை அங்கிருந்தவர்கள் தங்களது கைபேசியில் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டனர். ‘X’ தளத்தில் Dharma0292 என்ற கணக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோ, சில மணிநேரங்களிலேயே ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்றது.
“சிறு உயிராக இருந்தாலும் அதன் மதிப்பைப் புரிந்து கொண்ட இவரைப் போன்ற மனிதர்களுக்குத் தலைவணங்குகிறோம்”, “மனிதநேயம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி” எனப் பலரும் அந்த நபரைப் பாராட்டி வருகின்றனர். தற்போதைய இயந்திரத்தனமான உலகில், ஒரு பறவையைக் காப்பாற்றத் தனது உயிரையே பணயம் வைத்த அந்த நபரின் செயல் ‘இன்றைய சிறந்த வீடியோ’ எனப் புகழப்பட்டு வருகிறது.
