புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சிறுமி ஒருவர் மது அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், மது பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மேஜை அருகே ஒரு சிறுமி நின்று கொண்டிருக்கிறார். பெரியவர்கள் அனைவரும் மது போதையில் ஆடல், பாடலுடன் கொண்டாட்டத்தில் மூழ்கியிருக்க, யாரும் கவனிக்காத நேரத்தில் அந்த சிறுமி கண்ணாடி கோப்பையில் இருந்த மதுவை ஜூஸ் என நினைத்து குடிக்கிறார். அருகில் இருக்கும் பெற்றோரோ அல்லது உறவினர்களோ சிறுமியின் இந்த ஆபத்தான செயலை கவனிக்காமல் தங்கள் மகிழ்ச்சியில் மட்டும் குறியாக இருப்பது காண்போரை முகம் சுளிக்க வைத்துள்ளது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த இணையவாசிகள் கடும் கோபமடைந்துள்ளனர். “கொண்டாட்டம் என்ற பெயரில் பொறுப்பை மறப்பவர்கள் பெற்றோராக இருக்க தகுதியற்றவர்கள்” என்றும், “குழந்தைகளின் எதிர்காலத்தோடு விளையாடும் இத்தகைய நபர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் ஆவேசமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். பெற்றோரின் பொறுப்பற்றத்தனத்திற்கு சான்றாக விளங்கும் இந்த காட்சி, சமூகத்தில் நிலவும் மது கலாச்சாரத்தின் சீரழிவை சுட்டிக்காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.