திருச்சி அருகே மது குடிக்கப் பணம் தராத மனைவியைக் குக்கர் மூடியால் அடித்துக் கொலை செய்த கூலித் தொழிலாளியைக் காவல் துறையினர் கைது செய்தனர். அதாவது  திருச்சி மாவட்டம்  மேலபச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (45), விவசாயக் கூலித் தொழிலாளி. இவருக்குச் சின்னம்மாள் (42) என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். செந்தில்குமாருக்குக் குடிப்பழக்கம் இருந்ததால், கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று வழக்கம் போல் மது குடிக்கப் பணம் தருமாறு சின்னம்மாளிடம் செந்தில்குமார் கேட்டுள்ளார். அதற்கு அவர் பணம் தர மறுத்ததால், இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதமும் கைகலப்பும் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த செந்தில்குமார், வீட்டில் இருந்த பிரஷர் குக்கரின் மூடியை எடுத்துச் சின்னம்மாளின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் மண்டை உடைந்து, ரத்த வெள்ளத்தில் சரிந்த சின்னம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சின்னம்மாளின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகத் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக முயன்ற செந்தில்குமாரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.