மகாராஷ்டிர மாநிலம் பிம்ப்ரி-சிஞ்ச்வட் பகுதியில், 22 வயதுடைய திருமணமாகாத இளம்பெண் ஒருவர், தான் ஏழு மாத கர்ப்பமாக இருந்ததை குடும்பத்தினரிடம் மறைத்து, ரகசியமாக கருக்கலைப்பு மாத்திரைகளை உட்கொண்டதால் உயிரிழந்த சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த மாத்திரைகளின் தீவிர விளைவால் அவருக்குக் கடும் ரத்தப்போக்கு ஏற்பட்டு உடல்நிலை மோசமடைந்தது. உடனடியாக அவர் புனேவில் உள்ள சசூன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதே வேளையில், அவருக்குப் பிறந்த ஏழு மாதக் குழந்தையும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. இருப்பினும், தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அந்தப் பெண்ணும் அவரது பச்சிளம் குழந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து சிஞ்ச்வட் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்தப் பெண்ணுக்கு முறையான மருத்துவ ஆலோசனையின்றி கருக்கலைப்பு மாத்திரைகளை வழங்கியது யார் என்பது குறித்துப் போலீஸார் தேடி வருகின்றனர். மேலும், அந்தப் பெண்ணின் செல்போன் தரவுகள் அனைத்தும் அழிக்கப்பட்டிருப்பது காவல்துறையினருக்குப் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஆதாரங்களை மறைக்க யாராவது திட்டமிட்டுச் செயல்பட்டார்களா என்ற கோணத்தில் சைபர் நிபுணர்களின் உதவியுடன் மொபைல் தரவுகளை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சமூக வலைதளங்களிலும் உள்ளூர் மக்களிடையேயும் இந்த விபரீத முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
