அமெரிக்க நாட்டின் முதல் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன் ஆவார். இவருடைய பிறந்தநாள் ஆண்டுதோறும் பிப்ரவரி மூன்றாம் திங்கட்கிழமை அமெரிக்காவில் ஜனாதிபதி தினம் என்கிற பெயரில் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நாளில் அமெரிக்க முழுவதும் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நேற்று அவருடைய பிறந்தநாள் விழா அனுசரிக்கப்பட்டது. வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறுடன் சேர்ந்து இந்த விடுமுறை வந்ததால் அந்நாட்டில் உள்ள மக்கள் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்று விடுமுறையை கழித்தனர்.

இந்த நிலையில் பொது விடுமுறையின் போது நாடு முழுவதும் அரங்கேறிய துப்பாக்கி சூடு சம்பவங்கள் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. முதலில் சிக்காகோ நகரில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த காரின் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் பச்சிளம் குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். அதன் பின் நியூ ஆர்லியன்ஸ் மாகாணத்தில் நடைபெற்ற அணி வகுப்பில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் இளம்பெண் ஒருவர் பலியாகி உள்ளார். இதனை அடுத்து மிசிசிப்பி மாகாணத்தில் கேளிக்கை விடுதி மற்றும் சூப்பர் மார்க்கெட்டில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 7 பேர் பலியாகி உள்ளனர்.

இதனை தொடர்ந்து நியூ ஜெர்சி மாகாணத்தில் ஒரு நபர் தனது மகள், மகன் மற்றும் மனைவி ஆகிய மூவரையும் சுட்டுக்கொன்று விட்டு தானும் தற்கொலை செய்துள்ளார். மேலும் டெம்பில் பல்கலைக்கழகத்தில் நடந்த திருட்டை விசாரிக்க சென்ற காவல் அதிகாரியை 18 வயது சிறுவன் சுட்டுக் கொன்றுள்ளான். அது மட்டுமல்லாமல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கத்தோலிக்க பிஷப் டேவிட் ஓ கெனோலின் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக சுட்டுக் கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர். அமெரிக்கா முழுவதும் நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் மொத்தம் 17 பேர் பலியாகி உள்ளது அந்நாட்டையே அதிர வைத்துள்ளது.