அமெரிக்க நாட்டில் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடைபெறும் கடைசியாக கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் அவர்கள் வெற்றி பெற்றுள்ளார். இதனை அடுத்து அவருடைய பதவி காலம் அடுத்த ஆண்டு முடிவடைய இருப்பதால் அதிபர் தேர்தல் குறித்த தகவல் தற்போதே பரவத் தொடங்கியுள்ளது. இந்த தகவலில் 2024 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவார் என்ற தகவல் வெளியானது. அதேபோல் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுவார் என தகவல் கிடைத்தது.

மேலும் டொனால்ட் டிரம்ப் தன்னை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் வேறு யாரும் நிற்கக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தார். இதற்காக அவர் கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் பேசி அவர்களின் ஆதரவையும் பெற்றுள்ளார். இந்த நிலையில் அடுத்த வருடம் நடக்க இருக்கும் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி போட்டியிட இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவல் அமெரிக்காவில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குடியரசு கட்சி சார்பில் தன்னை எதிர்த்து யாரும் போட்டியிட மாட்டார் என நினைத்திருந்த ட்ரம்பிற்கு இது பெரும் சிக்கலாக அமைந்துள்ளது. அடுத்த வருடம் நடக்க இருக்கும் அமெரிக்கா அதிபர் தேர்தலில் போட்டியிட இருக்கும் விவேக் ராமசாமி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மிகப்பெரிய கோடீஸ்வரர் என்பது குறிப்பிடத்தக்கது.