ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் கடந்த 2023-ம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்ட ‘இம்பேக்ட் பிளேயர்’ தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் விதிமுறைக்கு பெரும்பாலான அணி கேப்டன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மும்பையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பண்ட் உள்ளிட்ட 10 அணிகளின் கேப்டன்களும் கலந்துகொண்டனர்.

அப்போது, இந்த விதிமுறை சர்வதேச போட்டிகளில் இல்லாத ஒன்று என்றும், இது திறமையான ஆல்-ரவுண்டர்கள் உருவாவதைத் தடுக்கும் வகையில் இருப்பதாகவும் கேப்டன்கள் தரப்பில் கவலை தெரிவிக்கப்பட்டது. கேப்டன்களின் இந்த ஆட்சேபனைகளை கேட்டறிந்த இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் மற்றும் நடுவர்கள், இது குறித்து விரிவாக விவாதித்தனர்.

எனினும், தற்போதைய நிலவரப்படி 2027-ம் ஆண்டு வரை இந்த இம்பேக்ட் வீரர் விதிமுறையில் எந்த மாற்றமும் இருக்காது என்று பிசிசிஐ தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதற்குப் பிறகே கேப்டன்களின் கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகள் குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.