தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. ஏப்ரல் 23 ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுக அனைத்துக் கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கும் தொகுதிகளை பங்கீடு செய்து கொடுத்த நிலையில் வேட்பாளர்களையும் அறிவித்துவிட்டது.

குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அதிமுகவின் இறுதி கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார். இதில் சென்னை தொகுதியில் வேட்பாளர்கள் யார் என்பது தெரியவந்துள்ளது. அதன்படி கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக சந்தானகிருஷ்ணன் களமூறங்குகிறார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் ஆதி ராஜாராம் என்பவர் களமிறங்குகிறார்.

சென்னையில் 15 தொகுதிகளில் திமுக களம் காணும் நிலையில் 12 இடங்களில் அதிமுகவுடன் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. மீதமுள்ள மூன்று இடங்களில் பாமக, அமமுக, பாஜக ஆகியோருடன் போட்டியிடுகிறது. திருச்சுழியில் அமைச்சர் தங்கம் தென்னரசுவை எதிர்த்து அதிமுக சார்பில் ராஜ வர்மனும், சென்னை துறைமுகம் தொகுதியில் அமைச்சர் சேகர்பாபுவை எதிர்த்து அதிமுக சார்பில் ராயபுரம் மனோவும் போட்டியிடுகிறார்கள்.

மேலும் மொத்தமாக 121 தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுக நேரடியாக போட்டியிடும் நிலையில் கூட்டணி கட்சிகளையும் சேர்த்து உதயசூரியன் மற்றும் அதிமுக சின்னங்களில் மொத்தமாக 133 தொகுதிகளில் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.