தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தி.மு.க-வின் முக்கியத் தலைவர்களை எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அ.தி.மு.க தலைமை வெளியிட்டுள்ளது. இதில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் போட்டியிடும் தொகுதிகளில் பலமான வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
தமிழக முதலமைச்சர் மற்றும் தி.மு.க தலைவரான மு.க. ஸ்டாலின், மீண்டும் தனது சொந்தத் தொகுதியான கொளத்தூரில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அ.தி.மு.க சார்பில் சந்தான கிருஷ்ணன் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆளும் கட்சியின் தலைவரை நேரடியாக எதிர்த்துப் போட்டியிட இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
கடந்த 2021 தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட மூத்த நிர்வாகி ஆதிராஜாராம், இந்த முறை தொகுதி மாற்றப்பட்டுள்ளார். அவர் சென்னை, சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் தி.மு.க இளைஞரணிச் செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.
தி.மு.க-வின் இரு பெரும் தலைவர்களை எதிர்த்து, அனுபவம் வாய்ந்த மற்றும் புதிய வேட்பாளர்களை அ.தி.மு.க களம் இறக்கியுள்ளது. குறிப்பாக, ஆதிராஜாராம் போன்ற மூத்த நிர்வாகிகள் மாற்றப்பட்டிருப்பது, ஒவ்வொரு தொகுதியிலும் கடும் போட்டியை உருவாக்க வேண்டும் என்ற அ.தி.மு.க-வின் வியூகமாகப் பார்க்கப்படுகிறது.
