தமிழக அரசியலில் அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இடையே வார்த்தைப் போர் முற்றியுள்ளது. சமீபத்தில் விஜய் அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுத்துள்ள அதிமுக முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், “விஜய்க்கு அரசியல் விவரம் எதுவும் தெரியாது; அவர் செய்தித்தாள் கூடப் படிப்பது இல்லை” என விமர்சித்துள்ளார்.

மேலும், விஜய் வெறும் மூன்று, நான்கு நபர்களுடன் மட்டுமே ஆலோசிப்பதாகவும், தரைமட்டத்தில் உழைக்கும் அதிமுகவை யாராலும் வீழ்த்த முடியாது என்றும் அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

அதிமுக கோட்டையைப் பிடிப்பதை எந்தக் கொம்பாதி கொம்பனாலும் தடுக்க முடியாது என்று கூறிய பொள்ளாச்சி ஜெயராமன், வரும் தேர்தலில் அதிமுக 210 இடங்களை வென்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராவார் என நம்பிக்கை தெரிவித்தார்.

இதற்கிடையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் விஜய்யின் வருமானம் குறித்துக் கேள்வி எழுப்பியிருந்தார். திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விரைவில் வெளியேறும் என்றும் அதிமுக தரப்பில் கணிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவினரின் இந்தத் தொடர் விமர்சனங்களுக்குத் தவெக நிர்வாகி செங்கோட்டையன் இன்று பதில் அளித்துள்ளார். அதிமுகவிற்குத் தோல்வி பயம் வந்துவிட்டதாலேயே விஜய்யைத் தொடர்ந்து விமர்சித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

அதிமுக அவசர அவசரமாகத் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருவதே அவர்களின் பயத்திற்குக் சாட்சி என்றும், விஜய்யின் வருகை மற்ற கட்சிகளைப் பதற்றமடையச் செய்துள்ளதாகவும் தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.