தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், தனது கட்சி அடைந்த தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அதிமுக தொண்டர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தென்காசி மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் மாரிக்கண்ணன் (47). தீவிர எம்.ஜி.ஆர் ரசிகரான இவர், அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பேருந்து ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு வேலம்மாள் என்ற மனைவியும், இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர்.

நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. மாறாக, அதிமுக எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. குறிப்பாக, மாரிக்கண்ணன் வசித்து வந்த ஆலங்குளம் தொகுதியிலும் அதிமுக வேட்பாளர் தோல்வியடைந்தார்.

தொலைக்காட்சியில் இந்த முடிவுகளைப் பார்த்துக் கொண்டிருந்த மாரிக்கண்ணன், கட்சியின் சரிவை எண்ணி மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார். இது குறித்துத் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் புலம்பி வந்த அவர், மாலை நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாதபோது மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

வீட்டிற்கு வந்த பிள்ளைகள், தந்தை சடலமாகத் தொங்குவதைப் பார்த்து அலறினர். தகவலறிந்து விரைந்து வந்த பாவூர்சத்திரம் காவல்துறையினர், மாரிக்கண்ணனின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகத் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.