விழுப்புரம் மாவட்டத்தின் முக்கியத் தொகுதிகளில் ஒன்றான மயிலம் சட்டமன்றத் தொகுதியில், அதிமுக-வின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான திரு. சி.வி. சண்முகம் அவர்கள் பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து, அவர் தனது தற்போதைய மாநிலங்களவை உறுப்பினர் (MP) பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மயிலம் தொகுதியில் பதிவான வாக்குகள், திண்டிவனம் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி மையத்தில் பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டன. மொத்தம் பதிவான 1,87,360 வாக்குகள் மற்றும் 2,009 தபால் ஓட்டுகளில், தொடக்கம் முதலே சி.வி. சண்முகம் முன்னிலை வகித்து வந்தார். 21 பேர் போட்டியிட்ட இந்தத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சி.வி. சண்முகம், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் நிரஞ்சனை விட 30,041 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றியை உறுதி செய்தார்.
தற்போது மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றி வரும் சி.வி. சண்முகம், சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதால், தனது எம்பி பதவியைத் துறந்து மாநில அரசியலில் முழுவீச்சில் செயல்படத் திட்டமிட்டுள்ளார்.
திமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டதும், முதல் தேர்தலிலேயே தவெக வேட்பாளர் இரண்டாம் இடத்தைப் பிடித்திருப்பதும் இத்தொகுதியில் கவனிக்கத்தக்க மாற்றங்களாகப் பார்க்கப்படுகின்றன. வெற்றியின் அடையாளமாக அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
