தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை தீர்மானத்தின் போது, கட்சியின் கொறடா உத்தரவை மீறி தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்கு ஆதரவாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சிலர் வாக்களித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொடுத்த பேட்டியில், அக்கட்சியினரையும் தவெக தலைவர் விஜய்யையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சட்டப்பேரவையில் தவெக அரசு கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது நடைபெற்ற வாக்கெடுப்பில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தரப்பு 25 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “சில எம்.எல்.ஏ.க்கள் அதிமுகவிற்கு பச்சைத் துரோகம் இழைத்துள்ளனர். கொறடா உத்தரவை மீறி, சட்டத்திற்குப் புறம்பாக அவர்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்” என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.

தவெக தலைவர் விஜய், கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்ற அதிமுக எம்.எல்.ஏ.க்களை நேரில் சந்தித்தது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது தூய்மையான ஆட்சி நடத்துவேன் என்று கூறும் தவெக தலைவர் விஜய், ஒரு கட்சியில் கருத்து வேறுபாடு நிலவும் போது, ஒரு தரப்பினரை மட்டும் ரகசியமாகச் சந்திப்பது எந்த விதத்தில் நியாயம்?.

எல்லா இயக்கங்களிலும் சோதனைகளும், பிரிவுகளும் வருவது இயல்பு. ஆனால், எந்த ஒரு நாகரிகமான தலைவரும் பிரிந்து சென்றவர்களின் இல்லங்களுக்குச் சென்று சந்திப்பது இல்லை.
ஆரம்பத்திலேயே தவறான பாதையில் செல்லும் விஜய், அரசியலில் ஒரு தவறான முன்னுதாரணத்தை உருவாக்குகிறார். இதுதான் அவர் சொல்லும் தூய்மையான அரசியலா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக அரசியலில் பெரும் திருப்பமாகப் பார்க்கப்படும் இந்த விவகாரம், வரும் நாட்களில் அதிமுக மற்றும் தவெக இடையே நேரடி மோதல் போக்கை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.