தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நேற்று முன்தினம் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். பதவியேற்ற கையோடு அரசியல் நாகரிகத்தைக் கடைப்பிடிக்கும் விதமாக, முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின், வைகோ, அன்புமணி ராமதாஸ் மற்றும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரை அவர்களது இல்லத்திற்கே நேரில் சென்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இந்தச் சந்திப்புகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், குறிப்பாக சீமான் உடனான விஜய்யின் சந்திப்பு சமூகவலைதளங்களில் விவாதமாக மாறியுள்ளது. இந்தச் சந்திப்பு குறித்துப் பதிவிட்டுள்ள இயக்குநர் சேரன், தேர்தல் களத்தில் சீமானின் 15 கால உழைப்பை மதிக்காமல் “மற்றும் பலர்” என விஜய் விமர்சித்தபோது ஏற்பட்ட வேதனைக்கு என்ன மருந்து என கேள்வி எழுப்பியுள்ளார்.

இருப்பினும், “நான் விதை போடுவேன், என் தம்பி அறுவடை செய்வான்” என்று சீமான் அடிக்கடி சொல்வதைச் சுட்டிக்காட்டிய சேரன், தற்போது அந்தத் தம்பியாக விஜய் இருந்துவிட்டுப் போகட்டும் என்று குறிப்பிட்டுள்ளார். சீமானின் எண்ணங்களுக்கும் திட்டங்களுக்கும் புதிய முதலமைச்சர் விஜய் செவிசாய்த்துச் செயல்பட்டால் மகிழ்ச்சி என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.