கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேரண்டப்பள்ளி மாரசந்திரத்தைச் சேர்ந்தவரும், அ.தி.மு.க. பிரமுகருமான ஹரீஷ் (32), நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் ஆகாத ஹரீஷ், கார் டிரைவராகப் பணிபுரிந்ததுடன், ரியல் எஸ்டேட் மற்றும் வட்டிக்குக் கடன் கொடுக்கும் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார். இவருக்கும், ஓசூர் வானவில் நகரைச் சேர்ந்த கணவரைப் பிரிந்து வாழ்ந்த ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. அந்தப் பெண் கடந்த பிப்ரவரியில் ஹரீஷ் மீது தொந்தரவு புகார் அளித்தபோதும், மீண்டும் அவருடன் தொடர்பில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு அந்தப் பெண்ணின் வீட்டில் சாப்பிட்டுவிட்டு ஹரீஷ் வெளியேறியபோது இந்தக் கொடூரம் நிகழ்ந்துள்ளது.

வானவில் நகர் – அண்ணாமலை நகர் இடையே ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த ஹரீஷைப் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், மாருதி நகர் பகுதியில் அவரை வழிமறித்து அரிவாளால் வெட்ட முயற்சித்தனர். இதில் ஸ்கூட்டரிலிருந்து தவறி விழுந்த ஹரீஷ் உயிர் பிழைக்க ஓடியபோதும், அந்தக் கொலைக் கும்பல் விடாமல் துரத்திச் சென்று சரமாரியாக வெட்டித் தள்ளியது.

இதில் கை, தலை உள்ளிட்ட பல இடங்களில் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டு ஹரீஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர் அந்தக் கொலைக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது. நேற்று காலை நடைபயிற்சி சென்ற பொதுமக்கள் ஹரீஷின் சடலத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்து ஓசூர் அட்கோ காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர் மற்றும் அட்கோ போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஹரீஷின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காகக் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தக் கொடூரக் கொலைக்குப் பெண் விவகாரமா, அல்லது ரியல் எஸ்டேட், வட்டிக்குக் கடன் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் தலையிட்டதால் கொலை செய்யப்பட்டாரா எனப் பல கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான மர்ம நபர்களைக் கைது செய்யத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.