அதிமுகவில் இருந்து விலகி செயல்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கட்சியில் மறுபடியும் ஒற்றுமையை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு (EPS) 10 நாட்கள் அவகாசம் அளித்து, அதிமுகவிலிருந்து வெளியேறிய முன்னாள் தலைவர்களையும், உறுப்பினர்களையும் மீண்டும் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, அதிமுக வட்டாரத்தில் அதிருப்தியையும், எதிர்பார்ப்பையும் ஒரே நேரத்தில் ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்த தலைமுறை பற்றிய தீர்மானம் எப்போது வரும் என்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு, AMMK பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது நிலைப்பாட்டை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளார். மதுரை மாவட்டத்தில் நடைபெறும் மூக்கையா தேவரின் நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, தனியார் ஹோட்டலில் பத்திரிகையாளர் சந்திப்பின் போது முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில், அவர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகியதற்கான காரணங்களையும் விளக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. அதிமுக, AMMK மற்றும் மற்ற அதிருப்தி தலைவர்கள் இணையும் புதிய அமைப்புக்கு இது முதல் கட்ட நகர்வாக இருக்கக்கூடும் என அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றன.
