வரவிருக்கும் துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தலை முன்னிட்டு, பாஜகவின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ), தமிழகத்தைச் சேர்ந்த மூத்த தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனை வேட்பாளராக அறிவித்துள்ளது.
செப்டம்பர் 9-ம் தேதி நடைபெற உள்ள இந்த தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலின் கடைசி தேதி ஆகஸ்ட் 21 ஆகும். தற்போதைய துணை ஜனாதிபதி ஜெகதீப் தங்கர், உடல்நலக்குறைவால் ஜூலை 21-ம் தேதி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, இந்த தேர்தல் நடைபெற உள்ளது. மகாராஷ்டிர மாநில ஆளுநராக பணியாற்றி வரும் சி.பி. ராதாகிருஷ்ணனை, பாஜக பாராளுமன்ற குழு ஒருமனதாக தேர்வு செய்துள்ளது.
தமிழ் மொழி மற்றும் பாரம்பரியத்திற்கு மரியாதை செலுத்தும் நோக்கத்தோடு தான் பாஜக இந்த முடிவை எடுத்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில், காசி தமிழ் சங்கமம் முதல் பல தேசிய, சர்வதேச நிகழ்வுகளிலும் தமிழ் மொழியின் பெருமை பறைசாற்றப்பட்டுள்ளது. “தமிழ் உலகின் பழமையான மொழி” என பிரதமர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார்.
இதற்கமைய, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர்களுக்கு உயரிய பதவிகளை வழங்கி, பாஜக தமிழர் பண்பாட்டுக்கு மதிப்பளித்து வருவதை இந்த முடிவு மேலும் உறுதி செய்கிறது.
தமிழகத்தில் இருந்து பாஜகவின் முக்கிய குரலாக இருந்த சி.பி. ராதாகிருஷ்ணன், கோயம்புத்தூரில் இருமுறை மக்களவை உறுப்பினராக பதவி வகித்துள்ளார். பாஜகவின் தமிழ்நாடு தலைவராகவும் பணியாற்றியுள்ளார். ஜார்கண்ட் ஆளுநராகவும், தெலுங்கானா மற்றும் புதுச்சேரியில் கூடுதல் பொறுப்புகளையும் ஏற்கும் வகையில் பணியாற்றியவர். அவரது நெடுங்கால அரசியல் சேவை மற்றும் தூய்மையான பிம்பம் காரணமாகவே, பிரதமர் மோடி தலைமையில் நடந்த என்டிஏ கூட்டத்தில், அவரைத் தேர்ந்தெடுக்கலாம் என தீர்மானிக்கப்பட்டது.

“தமிழ் – தமிழர்” அடையாள அரசியலை வலியுறுத்தும் திமுக, இம்முறை துணை ஜனாதிபதி பதவிக்கு தமிழரல்லாத ஒருவர் மீது ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனால், தேசிய மட்டத்தில் தமிழரை கௌரவிக்கும் வகையில் பாஜக எடுத்துள்ள இந்த முடிவு, திமுகவின் அரசியல் வாதங்களை கேள்விக்குள்ளாக்கும் வகையில் உள்ளது.
தமிழருக்கான உண்மையான மரியாதை என்ன என்பதை இந்த நேரத்தில் தேசிய அளவில் காட்டும் முயற்சியாகவே சி.பி. ராதாகிருஷ்ணனின் தேர்வு பார்க்கப்படுகிறது. இது, தமிழக அரசியலில் பாஜக எடுத்திருக்கும் முக்கியமான ‘சதுரங்க நகர்வாக’ அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
