அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனி துருவங்களாக மாறி தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். கடந்த ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு தற்போது விசாரணையில் இருக்கும் நிலையில், மத்திய அரசு அண்மையில் எடப்பாடி பழனிச்சாமியை இடைக்கால பொதுச் செயலாளர் என்று குறிப்பிட்டு கடிதம் எழுதி அனுப்பியது. இதன் காரணமாக டெல்லி பாஜகவின் முழு ஆதரவும் எடப்பாடி பழனிச்சாமிக்கு இருப்பதாகவே கூறப்படுகிறது.

இருப்பினும் ஓபிஎஸ் எடப்பாடி பக்கம் உள்ள அதிருப்தி தொடர்களை தன் பக்கம் இழுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் தேர்தல் அதிகாரி அதிமுக கட்சிக்கு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு கடிதம் எழுதிய அனுப்பியது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படும் நிலையில், ஓபிஎஸ் தற்போது எடப்பாடிக்கு டஃப் கொடுக்கும் வகையில் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக ஓபிஎஸ் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து பேச திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஓ. பன்னீர்செல்வத்தின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகளினால் எடப்பாடி தரப்பு கலக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.