உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷஹர் மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவர், கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ச்சியான வயிற்று வலி மற்றும் வாந்தி போன்ற குறைபாடுகள் காரணமாக பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இறுதியாக, ஒரு தனியார் எம்ஆர்ஐ (MRI) ஸ்கேன் மையத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் வெளியாகிய உண்மை மருத்துவர்களையும், குடும்பத்தினரையும் மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

பரிசோதனை செய்த மருத்துவர் கே.கே. குப்தா கூறியதாவது, “பொதுவாக கரு  கருப்பையில் உருவாக வேண்டும். ஆனால் இந்தக் கருப்பை பெண்ணின் கல்லீரலின் வலது பக்கத்தில் இருந்தது. மேலும் அது 12 வாரமாக வளர்ந்திருந்ததையும், கருவின்  இதயத் துடிப்பு இருந்ததையும் உறுதி செய்தோம்” எனக் கூறினார். இது வரை இந்தியாவில் இதுபோன்ற வழக்கு எதுவும் பதிவு செய்யப்பட்டதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

உலக அளவில் இதுபோன்ற கர்ப்பம் மொத்தம் 18 சம்பவங்களில் மட்டுமே பதிவாகியுள்ளது என மருத்துவக் கணக்குகள் தெரிவிக்கின்றன. மருத்துவர் குப்தா மேலும் கூறுகையில், “இந்த மாதிரியான கருப்பை, 14 வாரத்தைக் கடந்தால் தாயின் உயிருக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படும். அதனால், இது கண்டறியப்பட்ட உடனே அறுவை சிகிச்சை மூலம் அகற்றவேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இந்த அரிய மருத்துவ சம்பவத்தைத் தொடர்ந்து, கர்ப்பமான பெண் தற்போது உயர் சிகிச்சைக்காக டெல்லி AIIMS மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். இல்லத்தரசியான பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.  இவரது கணவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் நிலையில் உள்ளார். இந்த சம்பவம், இந்திய மருத்துவ வரலாற்றில் முதல் முறையாக பதிவு செய்யப்படும் கல்லீரல் கருப்பை வழக்கு என்ற வகையில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.