முக்கியக் குற்றவாளியான தனது கணவரைத் தேடி வந்த போலீசார், குற்றத்தில் நேரடியாகத் தொடர்பில்லாத ஒரு பெண்ணை அவரது குழந்தையுடன் அதிகாலையிலேயே காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற சம்பவத்திற்காக, ஒட்டுமொத்த காவல் நிலையத்தையும் பணியிடை நீக்கம் செய்து உயர் நீதிமன்ற நீதிபதி அதிரடி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பான நீதிமன்ற விசாரணை வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பொதுமக்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
அதாவது ஒரு வழக்கின் முக்கியக் குற்றவாளியான கணவரைத் தேடி அதிகாலை 4.15 மணியளவில் அவரது வீட்டிற்கு போலீசார் சென்றுள்ளனர். அப்போது கணவர் வீட்டில் இல்லாததால், தகவலை மறைத்ததாக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 202-ன் கீழ் மட்டும் அந்தப் பெண்ணின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் முதன்மைக் குற்றவாளியும் அல்ல, தப்பியோடவும் முயலவில்லை என்ற நிலையிலும், தனது குழந்தையைக் கவனித்துக் கொள்ள யாரும் இல்லாததால் குழந்தையுடன் காவல் நிலையம் செல்ல நேரிட்டுள்ளது.
https://www.instagram.com/reel/DZncifZBqUo/?igsh=MXJnbGo4Mmg3eXU3ZQ==
இந்த வழக்கின் விசாரணையின் போது, சட்டப்பூர்வ பாதுகாப்பு வழிமுறைகளை மீறி, சூரிய உதயத்திற்கு முன்பாக நள்ளிரவில் ஒரு பெண்ணை காவல் நிலையம் அழைத்துச் செல்ல வேண்டிய அவசரம் என்ன வந்தது என்று நீதிபதி போலீசாரைக் கடுமையாகக் கேள்வி எழுப்பினார். விதிவிலக்கான சூழ்நிலைகளைத் தவிர, சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகோ அல்லது சூரிய உதயத்திற்கு முன்போ பெண்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல சட்டம் பொதுவாக அனுமதிக்காது என்பதை அவர் நினைவூட்டினார்.
சம்பவ இடத்தில் இருந்த பெண் காவலரிடமும், இச்சம்பவத்திற்கும் வழக்கும் எவ்விதத் தொடர்புமில்லாத ஒரு சிறு குழந்தையைக் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்ததை எங்ஙனம் நியாயப்படுத்த முடியும் என நீதிபதி கேள்வி எழுப்பினார். போலீசாரின் விளக்கங்கள் திருப்திகரமாக இல்லாததால், ஒட்டுமொத்த காவல் நிலையத்தையும் பணியிடை நீக்கம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்காக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார். முக்கியக் குற்றவாளியைக் கைது செய்ய முடியாததற்காக, பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டப் பாதுகாப்புகளை மீறி நடவடிக்கை எடுப்பதை ஏற்க முடியாது என்று குறிப்பிட்ட நீதிபதி, காவல்துறை தனது கடமையைச் செய்யும்போது மனிதநேயத்தோடும், சட்ட உரிமைகளுக்கு மதிப்பளித்தும் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
