தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் திடீரென திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் சென்று விஸ்வரூப தரிசனம் செய்தது ஏன் என்பது குறித்த சுவாரசியமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. திரைப்படங்களிலிருந்து விலகி முழுநேர அரசியலில் இறங்கியுள்ள விஜய், அண்மையில் முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தனது கட்சியின் வெற்றி வாய்ப்பு குறித்து மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளார். இதற்கிடையே, அவருக்கு ஜாதக ரீதியாகச் சில தடைகள் இருப்பதாவும், அரசியல் ரீதியாக அவருக்கு எதிராகச் சூழ்ச்சிகள் நடைபெறுவதாகவும் அவரது தனிப்பட்ட ஜோதிடர் எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.
இந்தத் தடைகளை முறியடிக்கவும், எதிர்ப்புகளைத் தவிடுபொடியாக்கவும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிகாலை நடைபெறும் ‘விஸ்வரூப தரிசனத்தை’ தரிசிக்குமாறு அந்த ஜோதிடர் அறிவுறுத்தியதாகத் தெரிகிறது. அதன்பேரில் தான் விஜய் இன்று அதிகாலை திருச்செந்தூர் சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று அதிகாலை திருச்செந்தூர் கடற்கரைக்குச் சென்ற விஜய், அங்கு முறைப்படி கடலில் கால் நனைத்து முருகனை வழிபட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து கோயிலுக்குள் சென்று விஸ்வரூப தரிசனத்தில் பங்கேற்று மனமுருக வேண்டிக்கொண்டார். மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், தனது அரசியல் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த வழிபாடு நடந்ததாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே சினிமா பிரபலங்கள் பலரும் விஜய்க்கு வெளிப்படையாகத் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ள நிலையில், தற்போது ஆன்மிக ரீதியாகவும் அவர் தன்னைத் தயார்படுத்திக் கொள்வது அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளது. மாற்று மதத்தைச் சேர்ந்தவர் என்ற சர்ச்சை ஒருபுறம் வெடித்தாலும், விஜய்யின் இந்த ‘முருகன் தரிசனம்’ அவரது அரசியல் பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமையும் என அவரது ஆதரவாளர்கள் நம்புகின்றனர்.
