ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக சீதாலட்சுமி போட்டியிட்டார். வாக்கு சாவடி மையங்களில் பார்வையிட்ட சீதாலட்சுமி பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஈரோடு கிழக்கு தொகுதியில் பல வாக்கு சாவடிகளில் ஆளுங்கட்சி பிரமுகர்களால் நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. திமுகவினர் சர்வ சாதாரணமாக வாக்குச்சாவடிக்குள் செல்போன்களை எடுத்துச் சென்று வீடியோ எடுக்கிறார்கள். செய்தி சேகரிக்கும் செய்தியாளர்கள் வீடியோ எடுக்க கூடாது என விரட்டப்படுகிறார்கள்.

வேட்பாளராகிய என்னை கட்சித் துண்டு போடக்கூடாது என திமுகவினர் மிரட்டுகிறார்கள். தங்களுக்கு அதிகாரம் உள்ளது அது தங்களுக்கு தான் மீண்டும் கிடைக்கும் என திமுகவினர் கருதுகிறார்கள். கடந்த தேர்தலின் போது 60 ஆயிரம் வாக்குகள் பதிவாகவில்லை. ஆனால் இந்த முறை மக்கள் தன்னெழுச்சியாக வாக்களிப்பதை காண முடிந்தது. பெண் ஒருவரின் வாக்கை வேறொருவர் போட்டது குறித்து தகவல் கிடைத்துள்ளது. உரிய ஆதாரம் இல்லாமல் என்னால் குற்றம் சொல்ல முடியாது. வாக்குச்சாவடி முழுவதையும் திமுகவினர் வசம் வைத்திருந்தனர் என சீதாலட்சுமி குற்றம் சாட்டியுள்ளார்.