பாஜக மேலிடமான பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் ஆசீர்வாதத்துடன்தான் அண்ணாமலை புதிய இயக்கத்தைத் தொடங்கியுள்ளார் என்று பரவி வரும் வதந்திகளுக்குத் தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தற்பொழுது மிகக் காரசாரமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அண்ணாமலையின் புதிய இயக்கத்திற்கு டெல்லி தலைமையின் ஆசீர்வாதம் இருப்பதாகக் கூறுவது முற்றிலும் தவறு என்று அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
மேலும், அண்ணாமலை கட்சியை விட்டு வெளியேறியதால் பாரதிய ஜனதா கட்சிக்கு எந்தவிதமான பாதிப்பும், பின்னடைவும் ஏற்படவில்லை என்றும் அவர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். பாஜகவில் பொறுப்பில் இருந்து கொண்டு வேறு எந்த ஒரு இயக்கத்திலும் யாரும் நீடிக்க முடியாது என்பதை நயினார் நாகேந்திரன் மிகத் தெளிவாக எச்சரித்துள்ளார். அதே நேரத்தில், அவசரப்பட்டு பாஜகாவுக்குள் இருந்து வெளியேறியவர்கள் மீண்டும் மனம்மாறி தாராளமாகத் கட்சிக்குள் திரும்பி வரலாம் என்றும், அவர்கள் மீது எந்த ஒரு ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் அவர் ஓப்பனாகக் கூறியுள்ளார்.
தமிழகத்தில் தற்போதைய ஆளுங்கட்சிக்கு நேரடிப் போட்டியே பாரதிய ஜனதா கட்சிதான் என்றும், கட்சி எப்போதும் போல மிக பலமாகவே உள்ளது என்றும் அவர் பேசியுள்ளார். அண்ணாமலையின் மெகா உறுப்பினர் சேர்க்கை அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே, டெல்லி ஆசீர்வாதம் குறித்து நயினார் நாகேந்திரன் உடைத்துள்ள இந்த உண்மை அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
