திரிபுரா மாநிலம் சிபாஹிஜாலா மாவட்டத்தில் உள்ள சோனாமுரா பகுதியில், 10-ஆம் வகுப்பு பயிலும் 16 வயது சிறுமி ஒருவர் தனது தாத்தாவால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சிறுமியின் தாய் உயிரிழந்த நிலையில், தந்தை பெங்களூருவில் வேலை நிமித்தமாக தங்கியுள்ளார். இதனால் அந்தச் சிறுமி தனது தாத்தா மற்றும் பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை அந்தச் சிறுமி வீட்டில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தச் சோகச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

இதனால் தன் மகளின் மரணத்தில் சந்தேகம் அடைந்த தந்தை, தனது தந்தை (சிறுமியின் தாத்தா) மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் தனது மகளை வன்கொடுமை செய்து கொன்றதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் 70 வயது முதியவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது அதன் அறிக்கை வெளியான பிறகே மரணத்திற்கான உண்மையான காரணம் மற்றும் பாலியல் வன்கொடுமை குறித்த முழு விவரங்களும் உறுதியாகத் தெரியும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.