மத்திய டெல்லியின் சப்தர்ஜங் பகுதியில் உள்ள கிரீன் பார்க் இல்லத்தில் வசித்து வந்த 30 வயதான நீதிபதி அமன்குமார் ஷர்மா, தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் டெல்லி கர்கர்டூமா நீதிமன்றத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளராகப் பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று இவரது அறைக் கதவு நீண்ட நேரமாகத் திறக்கப்படாததால், சந்தேகமடைந்த உறவினர்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

மேலும் விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, அவர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். உடனடியாக அவர் சப்தர்ஜங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

இதனால் சம்பவ இடத்தைச் சோதனையிட்ட போலீசார், அங்கிருந்து அவர் எழுதிய உருக்கமான கடிதம் ஒன்றைக் கைப்பற்றியுள்ளனர். அந்தக் கடிதத்தில் தனது தற்கொலைக்கான காரணம் குறித்துப் பல்வேறு தகவல்களை அவர் பகிர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்து வந்ததாகவும், இதன் காரணமாக அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் 2021-ம் ஆண்டு டெல்லி நீதித்துறைப் பணியில் சேர்ந்த அமன்குமார், திறமையான நீதிபதியாக அறியப்பட்டவர். தற்போது அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், தற்கொலைக்கான உண்மையான பின்னணி குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.