கேரள மாநிலம் ஆலப்புழா அருகே மாயமான நர்சு, பம்பை ஆற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாவேலிக்கரையைச் சேர்ந்த ரஞ்சு என்பவரின் மனைவி தன்யா, திருவல்லாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாகப் பணியாற்றி வந்தார்.

மேலும் கடந்த ஏப்ரல் 26-ம் தேதி மாலை வேலைக்குச் செல்வதாகக் கூறி கணவரால் பேருந்து நிலையத்தில் விடப்பட்ட தன்யா, அதன் பிறகு மருத்துவமனைக்குச் செல்லவில்லை. நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததாலும், செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்ததாலும் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், காவல்துறையில் புகார் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்த நிலையில், ஆறு நாட்களுக்குப் பிறகு புளிக்கிழ் பகுதியில் பம்பை ஆற்றின் கரையில் அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில் அது மாயமான தன்யாவின் உடல் என்பது உறுதி செய்யப்பட்டது.

இதனால் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இத்தம்பதிக்கு 6 வயதில் ஒரு மகள் உள்ளார். தன்யாவின் மரணத்தில் ஏதேனும் மர்மம் உள்ளதா, அவர் கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்டாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.