உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகரில் உள்ள வடக்கு ராம்புரி பகுதியில், செப்டம்பர் 30 அன்று ஒரு முதியவர் பயங்கரமாக தாக்கப்பட்ட சம்பவம் நடந்தது. சுபாஷ் என்ற அந்த முதியவர், தனது வீட்டுக்கு வெளியே நின்றபோது, காளை ஒன்று அவரைத் தாக்கி, வடிகாலில் தூக்கி வீசியது. இந்த அதிர்ச்சியூட்டும் தாக்குதல் கேமராவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதில், சுபாஷின் தலை மற்றும் மார்பில் கடுமையான காயங்கள் ஏற்பட்டன. இதே காளை, முன்னதாக வேறொரு நபரையும் தாக்கி காயப்படுத்தியதாக தெரிகிறது.

இந்த காளை நான்கு நாட்களாக அந்தப் பகுதியில் உலவி, மக்களிடையே பயத்தை ஏற்படுத்தியது. அருகில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளைப் பாதுகாக்க, சுபாஷ் காளையை விரட்ட முயன்றபோது, அது அவரைத் தாக்கியது. வீடியோவில், காளை தனது கொம்புகளால் சுபாஷை தூக்கி வடிகாலில் வீசுவது தெரிகிறது. அவரது கூச்சலைக் கேட்டு, குடும்பத்தினரும் அயலவர்களும் ஓடி வந்து, குச்சிகளைப் பயன்படுத்தி காளையை விரட்டினர்.

அதிகாரிகள் இந்த வீடியோவை கவனித்து, காளையை பிடிக்க குழு அனுப்பியுள்ளனர். பிடிபட்ட பிறகு, அது மாட்டுத் தொழுவத்திற்கு மாற்றப்படும் என்று தெரிவித்தனர். இப்பகுதி மக்கள், குழந்தைகளும் முதியவர்களும் பயமின்றி நடமாட, மாநகராட்சியும் காவல்துறையும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.