ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும், உலகத்தரம் வாய்ந்த பேட்டருமான ஸ்டீவ் ஸ்மித், தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL 2026) தொடரில் பங்கேற்று வரும் நிலையில், அவரது உடல்வாகு குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முல்தான் சுல்தான்ஸ் அணிக்காக முதல்முறையாக பிஎஸ்எல் தொடரில் விளையாடி வரும் ஸ்டீவ் ஸ்மித், அண்மையில் நடந்த போட்டியின் போது ஊடகத் துறையினரைச் சந்தித்தார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவில், ஸ்மித் சற்று உடல் எடை அதிகரித்திருப்பது போன்றும், அவருக்குத் தொப்பை இருப்பது போன்றும் தெரிந்தது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், அவரது தற்போதைய நிலையை முன் எப்போதும் இல்லாத அளவிற்குச் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.
What happened to Steve Smith, man? 😭😭 pic.twitter.com/QiqYhyqLRl
— Banton (@ImBanton_) April 28, 2026
அந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் சிலர், “ஸ்மித் பிஎஸ்எல் விளையாட வரவில்லை, பாகிஸ்தான் பிரியாணி சாப்பிட வந்துள்ளார்” என்றும், “அவர் பாகிஸ்தான் உணவுகளை அதிகம் நேசிக்கத் தொடங்கிவிட்டார்” என்றும் பதிவிட்டு வருகின்றனர். இன்னும் ஒரு படி மேலே போய், சிலர் அவரை “பாகிஸ்தானின் சோட்டா பீம்” என உருவக்கேலி செய்தும் வருகின்றனர்.
உடல்வாகு குறித்து விமர்சனங்கள் எழுந்தாலும், களத்தில் ஸ்மித்தின் ஆட்டம் குறையவில்லை. நடப்புத் தொடரில் ஹைதராபாத் கிங்ஸ்மேன் அணிக்கு எதிராக 50 பந்துகளில் 106 ரன்கள் விளாசி தனது ஆறாவது டி20 சதத்தைப் பதிவு செய்துள்ளார். இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், சுமார் 350-க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்து அணியின் முக்கியத் தூணாக விளங்கி வருகிறார்.
இருப்பினும், நேற்றைய (ஏப்ரல் 29) எலிமினேட்டர் போட்டியில் அவர் 13 ரன்களில் ஆட்டமிழந்ததுடன், முல்தான் சுல்தான்ஸ் அணி தொடரை விட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது. சிறந்த வீரராக இருந்தாலும், உடற்தகுதியில் காட்டும் அலட்சியம் ஒரு எலைட் வீரருக்கு அழகல்ல என ஒரு தரப்பு ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
