போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வரும் நிலையில், சவூதி அரேபியாவில் ஒரே நாளில் 8 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட சம்பவம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. நஜ்ரான் பகுதியில் நான்கு சோமாலியர்களும், மூன்று எத்தியோப்பியர்களும் போதைப்பொருள் கடத்தியதாக கூறி தூக்கிலிடப்பட்டனர் என சவூதி அரசாங்கத்தின் செய்தி நிறுவனம் SPA தெரிவித்துள்ளது.
இதனுடன், தனது தாயை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட சவூதி நபருக்கும் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம், 2024-ஆம் ஆண்டு தொடக்கம் முதல் சவூதி அரசு 230 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 154 பேர் போதைப்பொருள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு முழுவதும் 338 பேர் மரணதண்டனை பெற்றதைக் காட்டிலும், இந்த ஆண்டின் எண்ணிக்கை அதைவிடவே மிகுந்த வேகத்தில் உயர்கிறது. AFP ஆய்வு தகவலின்படி, 2022-இல் 19 பேருக்கும், 2023-இல் 2 பேருக்கும், ஆனால் 2024-இல் மட்டும் இதுவரை 117 பேருக்கு போதைப்பொருள் தொடர்பாக மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த அபாயகரமான உயர்வுக்கு முக்கியக் காரணமாக, 2023-இல் சவூதி அரசு தொடங்கிய போதைப்பொருள் எதிர்ப்பு யுத்தம் தான் என சுட்டிக்காட்டப்படுகின்றது. மூன்று ஆண்டுகளுக்கு பின், 2022-இல் மரணதண்டனையை மீண்டும் தொடங்கிய அரசாங்கம், தற்போது அதனை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது.
சவூதி அரசு தரப்பில், “மரணதண்டனை என்பது பொது ஒழுங்கை பாதுகாக்க முக்கியமானது. மேல்முறையீடு செய்யும் அனைத்து வழிகளும் முடிந்த பிறகே தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுகிறது” என்ற தகவலும் கூறப்பட்டுள்ளது.
