பீகார் மாநிலத்தில், குடும்பத் தகராறு காரணமாகத் தாய் தனது மூன்று குழந்தைகளுடன் கிணற்றில் குதித்ததில் இரண்டு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். சப்பர்தி கிராமத்தைச் சேர்ந்த முகமது ஷம்ஷீர் என்பவரது மனைவி ரூபிஷா கட்டூன், வியாழக்கிழமை இரவு சுமார் 8.30 மணியளவில் இக்கோர முடிவை எடுத்துள்ளார்.

உயிரிழந்தவர்கள் ஷம்ஷீரின் 7 வயது மகள் அலிஷா மற்றும் 5 வயது மகன் ஆமிர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கிணற்றில் குதித்த சத்தம் கேட்டு ஓடிவந்த கிராம மக்கள், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு நான்கு பேரையும் வெளியே மீட்டனர். எனினும், ஆமிர் மற்றும் அலிஷா ஆகிய இருவரும் ஏற்கனவே மூச்சுத் திணறி உயிரிழந்த நிலையில், ரூபிஷா மற்றும் அவரது மூத்த மகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த சோனோ காவல் நிலைய பொறுப்பாளர் தர்மேந்திர குமார், நேரில் சென்று விசாரணை நடத்தினார். முதற்கட்ட விசாரணையில், சொத்து விவகாரம் தொடர்பாகத் தனது மாமியாருடன் ரூபிஷாவுக்குத் தகராறு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்துத் தனது கணவரிடம் முறையிட்டபோது, சூரத்தில் வேலை செய்து வரும் கணவர், தொலைபேசி வாயிலாகத் தனது தாய்க்கு ஆதரவாகப் பேசியதோடு மனைவியைக் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான ரூபிஷா, ஆத்திரத்தில் தனது இரு குழந்தைகளை முதலில் கிணற்றில் வீசிவிட்டு, பின்னர் மூன்றாவது குழந்தையை அணைத்தபடி தானும் குதித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.