உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் அடுத்தடுத்து மூன்று பேரைக் கொலை செய்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவரைப் பொதுமக்கள் மடக்கிப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்தச் சம்பவத்தில் ராணுவத் தொடர்பு இருப்பதால் மத்திய புலனாய்வு அமைப்புகளும் விசாரணையில் இறங்கியுள்ளன.

உத்தரப் பிரதேச மாநிலம் அலிநகர்  மருத்துவமனையில், பீகாரைச் சேர்ந்த லட்சுமினா (55) என்ற பெண் சிகிச்சை பெற்று வந்தார். திங்கட்கிழமை காலை 6:30 மணியளவில், நோயாளி போல மருத்துவமனைக்குள் நுழைந்த கொலையாளி, கவுண்டரில் ‘வீரேந்திரா’ என்ற பெயரில் மருந்துச் சீட்டு பெற்றுள்ளார். பின்னர் சிகிச்சை பெற்று வந்த லட்சுமினாவைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். அங்கிருந்த மக்கள் கொலையாளியைப் பிடித்துத் தர்ம அடி கொடுத்துப் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸைச் சேர்ந்த குர்பிரீத் சிங் என்பது தெரியவந்தது. முன்னாள் ராணுவ வீரரான இவர், தற்போது பீகார் மாநிலம் ஆராவில் பாதுகாவலராக பணியாற்றி வந்துள்ளார். இவரிடமிருந்து இரண்டு உரிமம் பெற்ற துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தக் கொலைக்கு முன்னதாகவே அவர் இரண்டு கொலைகளைச் செய்திருப்பது விசாரணையில் அம்பலமானது.

குச்மன் ரயில் நிலையம் அருகே ஓடும் ரயிலில் ஒருவரைத் தலையில் சுட்டுக் கொன்றார். வியாஸ்நகர் ரயில் நிலையம் அருகே ரயிலில் மற்றொருவரையும் சுட்டுக் கொன்றுள்ளார். மூன்றாவதாகவே மருத்துவமனையில் இந்தப் பெண்ணைச் சுட்டுக் கொன்றுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு முன்னாள் ராணுவ வீரர் என்பதாலும், உபி, பீகார் மற்றும் பஞ்சாப் ஆகிய மூன்று மாநிலங்களுடன் இவருக்குத் தொடர்பு இருப்பதாலும், மத்திய புலனாய்வு அமைப்புகள் களமிறங்கியுள்ளன. அவர் பயன்படுத்திய மருந்துச் சீட்டில் மனநல பாதிப்பிற்கான மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது. அவர் உண்மையாகவே மனநலம் பாதிக்கப்பட்டவரா அல்லது திட்டமிட்டு இந்தக் கொலைகளைச் செய்தாரா என்பது குறித்து அவரது குடும்பத்தினரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.